75 ஆண்டுகளுக்கு பின்பு காதலியை சந்தித்த காதலன், 2ம் உலகப்போரின் முடிவில் பிரிந்தவர்கள் மீண்டும் சந்தித்த நெகிழ்ச்சி கதை..!

வைரல் நியூஸ்

காதலியை ஒருவாரம் சேர்ந்தால் போல் பார்க்காவிட்டாலே நம்மவர்களுக்கு தலையே வெடித்துவிடும். ஆனால் இங்கு ஒருவர் தனது 97வது வயதில் கிட்டத்தட்ட 75 ஆண்டுகளுக்கு பின்னர் தனது காதலியைச் சந்தித்துள்ளார். அமெரிக்க நாட்டை சேர்ந்த ராபின்ஸ் என்னும் 97 வயதான ராணுவவீரர் அண்மையில் பிரான்ஸில் நடந்த 75வது கொடி நாள் விழாவில் கலந்து கொண்டார். அப்போது ஊடகவியாளர்களிடம் பழைய நிகழ்வுகளை பேசினார் ராபின்ஸ்.

அப்போது அவர், ‘’1944ல் நான் இங்கு வந்திருக்கிறேன். அப்போது என் ஆடைகளை சலவை செய்ய ஆள்தேடினேன். அப்போது ஒரு பெண் அதற்கு சம்மதித்தார். அப்போது அந்த பெண்ணின் மகள் ஜென்னீன் பிசர்சன் மீது எனக்கு காதல் வந்தது. இருவரும் காதலித்தோம். இரண்டு மாதங்களில் நாங்கள் அந்த பகுதியில் இருந்து வெளியேற வேண்டிய சூழல் வந்தது. மீண்டும் வந்து உன்னை கூட்டிட்டு போகிறேன் என சொன்னேன். அவளோ அழுது கொண்டிருந்தாள்.

போர் முடிந்தது. ஆனால் உடனே அமெரிக்கா செல்ல வேண்டி இருந்ததால் என்னால் அங்கு செல்ல முடியவில்லை. அவளது படம் இன்னும் என்னிடம் இருக்கிறது” அவளை கண்டுபிடிக்க உதவமுடியுமா என கேட்டார் காதல் மன்னன் தாத்தா. உடனே பத்திரிகையாளர்கள் டைட்டானிக் பாணியில் நீளும் இந்த கதைநாயகர்களை சேர்த்து வைத்துவிட வேண்டுமென, தேடினர்.

முதன் முதலாக அவர்கள் சந்தித்த இடத்தில் இருந்து 27 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு கிராமத்தில் அவரது காதலி உயிருடன் இருப்பதைக் கண்டுபிடித்தனர். இந்த சந்திப்பில் ராபின்ஸ், காதலியை கட்டி அணைத்ததோடு, காதலியின் நினைவாக தான் பாதுகாத்து வைத்திருந்த அவரிடம் சர்ப்ரைஸ் கிப்டாக கொடுத்திருக்கிறார்.

தொடர்ந்து அமெரிக்காவுக்கு போன நீங்கள் ஏன் என்னைப் பார்க்கவரவில்லை ? போர் முடிந்தபோதும் கூட நீங்கள் இங்கேயே தங்கிவிட வேண்டும் என கடவுளிடம் மன்றாடினேன் என உருகியுள்ளார். அமெரிக்க சென்ற போது தனக்கு திருமணம் செய்து வைத்து விட்டனர். இதனால் திரும்ப வர முடியவில்லை என ஏக்கத்தோடு கூறியிருக்கிறார் ராபின்ஸ். இருவருமே இப்போது வாழ்க்கைத் துணைகள் இழந்து வாழ்ந்து வருகின்றனர். அங்கிருந்து பிரிகையில் இருவரின் கண்களிலும் தாரை, தாரையாக கண்ணீர் கொட்டியது. இந்த இடமே இவர்களின் 75 ஆண்டுகாலத்துக்கு பிந்தைய சந்திப்பால் காதல் மயமானது